ஒன்றிரெண்டு பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஊரில் இருந்த காலம். இருந்த காலமென்ன, இப்பவும் அப்படித்தான். பெரும்புள்ளிகள் வேறு பள்ளிகளை ஊருக்கு வந்து விடாமல், பலவிதங்களில் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். எட்டாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம் மட்டும் ஊருக்குள் இருக்கும். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டு வரை இருக்கும் உயர்நிலைப்பள்ளி ஊருக்கு சற்று வெளியே.
அந்தப் பள்ளிக்கூடத்தை ”ஐஸ் ஸ்கூல்” னு பேசும் போது சொல்லுவாங்க. ஒரு வேளை, ஐஸ் வண்டிக்காரர்கள் பள்ளிக்கூட வாசலில் நிறைய நிற்பதால், வந்த பெயரா இருக்கும்னு, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போற வரை நினைச்சிட்டிருந்தேன். பொறவு தான் ஐஸ் அல்ல, High Schoolனு தெரிஞ்சது.
அங்க, ஒன்பதாப்புக்கு திருமலை ஐயாவும், பத்தில் புயல்நிதி ஐயாவும் (நெசப்பேரே இதான்), பதினொன்னுக்கும், பன்னெண்டுக்கும் முத்தையா ஐயாவும் தான் தமிழாசிரியர்கள். மொத மொத தமிழ்க் கட்டுரைக் குறிப்பேடுகளில், சுத்தத் தமிழில் அவங்கவங்க பேரை எழுதச் சொன்னதும் முத்தையா சார் தான். அதுலயும், பேர்ல வர்ற சமஸ்கிருத எழுத்தையும் தமிழ்ல எழுதுங்கனு வேற சொல்லீட்டாரு. ஸ்ரீகாந்த்னு ஒரு பய, தமிழில் திருகாந்த் என்று எழுதீருந்தான். அதை சீகாந்த்-னு திருத்திக் கொடுத்தது இன்னும் நினைப்பிருக்கு.
அதே மாதிரி, எட்வின் பாலையா சார் வரலாற்று பாடம் நடத்தறதோட மட்டுமில்லாம, உலகச் செய்திகள், பொது அறிவு, அப்புறம் வேறு நல்ல விசயங்களைப் புரியற மாதிரி சொல்லுவார். அப்படியொரு நாள்ல, ஏம்பா! நீங்களாகவே நாலஞ்சு பேர் சேந்து, மதுரைக்கோ அல்லது வேறு ஏதாவது எடத்துக்கோ போய்ப் பாத்துட்டு வரலாம்ல! செலவும் கம்மியாத் தான் ஆகும். வெளி உலக அறிவும் கெடைக்கும்னு சொன்னாரு. அவருக்கென்ன சொல்லுவாரு, இதெல்லாம் நடக்குற காரியமா?னு இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்றுவோம்.

குத்தாலத்துல சாரல் ஆரம்பிச்சதும், பையங்களாச் சேந்து குத்தாலம் போய்ட்டு வாங்கடா!னு ஒரு தடவ சொல்லிருந்தாரு. அதோட எம்புட்டு செலவாகும்ன்றதயும், எப்படியெப்படிப் போணும்றதயும், சொன்னாரு. ரயில்ல போலாம். சினிமால பாத்த குத்தாலத்த நேருல பாக்கலாம், குளிக்கலாம்னு நாளுக்கு நாள் பேசிப் பேசி, போயிட்டு ரெண்டு நாள் இருந்திட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணுனோம்.
முழுப்பரீச்ச லீவு முடிஞ்சி, பள்ளிக்கூடம் தொறக்கதுறக்கு முந்துன வாரம் போய்ட்டு வந்திரலாம்னு ஒரு யோசன. நாளும் குறிச்சாச்சு. நாள் நெருங்க, நெருங்க, பாக்கிறவன் ஒவ்வொருத்தனும் நான் காசு வாங்கீட்டேன், வீட்ல கேட்டுட்டேன்னு கடுப்பேத்திட்டிருந்தாங்ங. எங்கிட்ட காசுமில்லை, வீட்ல எப்படிக் கேக்கிறது? கேட்டா அடி தான் விழும்ன்ற யோசனையில நாள் ஓடீட்டே இருந்துச்சு. கெளம்பற நாளும் வந்துருச்சு.
பரீச்ச முடிஞ்சதுலருந்து, திரும்ப பள்ளிக்கூடம் தொறக்கற வரை, சைக்கிள் கடையில வேலை எனக்கு. ஏற்கனவே, கடக்காரர்ட்ட குத்தாலம் போற விசயத்தச் சொல்லி, பணம் வேணும்னு காலையில கேட்டதுக்கு, காதுல வாங்கியும், வாங்காமயும் இருந்தாரு. மதியம் திரும்பயும் காசு வேணும்னு ஞாவப்படுத்துனேன். பஞ்சுக்கடைக்காரர் வண்டி முடியட்டும். சாய்ந்தரம் வந்து எடுத்துட்டுப் போறேன்னிருக்காரு. அவரு வந்தாத் தான் இன்னைக்கு காசு!னு சொல்லிட்டாரு. ரயில்வே ஸ்டேசன் போற வழியில நான் வேல பாக்குற கடை. ராத்திரி எட்டு மணிக்கு மேல செங்கோட்டை வண்டி வரும். ஏழு மணிக்கு முன்னாடியிருந்தே, ஒவ்வொருத்தனா பையோட வந்திட்டேருந்தாங்ங.
போறப்போ, காத்தடிச்சிட்டு, பஞ்சர் பாத்துக்கிட்டு, அழுக்குக் கையோட நின்னுட்டிருந்தவன்ட்ட, கெளம்பி போறவன், ஒவ்வொருத்தனாக வந்து என்னடா வரலியா?னு ஐயோ! பாவமாப் பாத்துட்டு போய்ட்டிருந்தாங்ங. எல்லாரும் ஸ்டேசனுக்கு வந்திட்டாங்ங என்னத் தவிர. நேரம் வேற ஆயிட்டேருக்கு. நீ கெளம்புனு கடக்காரரும் சொல்லல. நானும் கேக்கல. நாம போகப் போறதில்லன்ற முடிவுக்கு வந்திட்டன். பொறவு, அவங்ஙளுக்குள்ளேயே பேசி, ஒவ்வொருத்தங்கிட்டயும் எவ்ளோ காசிருக்குனு கணக்கு பாத்துட்டு, கீரி மட்டும் கடைக்கு வந்து, டேய்! வீட்ல மட்டும் கேட்டுட்டு துணிய எடுத்திட்டு வா! ஒனக்குஞ்சேத்து எங்ககிட்ட காசிருக்கு. பொறவு பாத்துக்கலாம்னு சொன்னான். ஒரே யோசனையா இருந்துச்சு.
யோசிச்சிட்டு ஒரே முடிவா, குத்தாலம் போவப் போறேன், வீட்டுக்குப் போய்ட்டுப் போகணும்னு சொன்னதும், நாம காசு கொடுக்காம எப்படிப் போயிருவாரு ஐயா?பாக்கலாம்னு நினைச்சிட்டிருந்தவர் முகத்துல ஈயாடல. செரி! கெளம்புனு மட்டும் சொல்லிட்டாரு. ஆனா, காசு கொடுக்கல. அங்கயே ஒரு சைக்கிளக் கேட்டு எடுத்துக்கிட்டு, வீட்டுக்குப் போயி, எல்லாரும் எனக்காவக் காத்திட்டிருக்காங்ஞ. எனக்கும் சேத்து வேற டிக்கெட் எடுத்திட்டாங்ஞனு சொல்லியும், தனியா வெளியூருக்குப் போறது என்ன பழக்கம்? போவக் கூடாதுன்னுட்டாங்க. பின்ன, கெஞ்சிக் கெதறி, அழுது புடிச்சதுல, எக்கேடு கெட்டோ போய்த் தொலைன்னுட்டாங்க. அப்ப வீட்லயும் காசுக்கு கஷ்டம். எதும் இல்லை. செரி! பரவாயில்லைனு துணியெல்லாம் எடுத்து பையில அமுக்கித் திரும்பயும், கடைக்கு வந்து வண்டிய விடும் போது, கடக்காரர் காசு வச்சிருக்கியாடா?னு கேட்டார். இல்லன்னதும், அந்த மாசச் சம்பளம் எழுவத்தஞ்சு ரூவாயக் கொடுத்தாரு.
மொத்தம் பதினோரு பேரு. குத்தாலம் போறேன்/றோம்ன்றத நம்பவே முடியல. ஆனா, வண்டி வர்றதுக்காக காத்துக் கெடக்கோம். திடீர்னு மனசு மாறி, வீட்லருந்து வந்து கூட்டீட்டுப் போயிருவாங்களோ? இன்னும் ரயில வேற காணோமேனு மனசுக்குள்ள பதட்டம். மொத, மொத தனியா, அதுவும் கூடப்படிக்கிறவங்ஙளோட. சொல்ல முடியாத மகிழ்ச்சி. எல்லாரும் ஒரே கூத்தும், கும்மாளமும் தான் செங்கோட்டை போய்ச் சேர்ற வரைக்கும்.
தெங்காசி வரும் போதே, நல்ல சாரல் அடிச்சது. செங்கோட்டைக்கு போய்ச் சேந்து ஸ்டேசன்லேயே படுத்திட்டு, காலையில எந்திச்சு குத்தாலம் போங்கனு ஏற்கனவே வாத்தியாரு சொல்லியிருந்தாரு. குத்தாலச் சாரலும், குளுரும் செங்கோட்டையிலயும் இருந்தது. விடியுற வரைக்கும் தூங்கவேயில்லை. தூக்கமும் வரல, அலுப்பாவும் தெரியல. ஆனாலும், நல்லாருந்துச்சு.
காலயில கெளம்பி குத்தாலத்துக்கு போய், தங்குறதுக்கு எடம் தேடிக் கடேசியா “கண்ணாடி பங்களா”னு ஒரு எடத்துக்கு வந்து சேந்தோம். வாடகையும் கட்டுபடியாகுறாப்புல இருந்தது. குத்தாலத்துல தண்ணி விழ ஆரம்பிச்சிருச்சுனா, உள்ளூர்க்காரங்க அவங்க தங்கியிருக்கிற வீட்டையே ரெண்டாப் பிரிச்சு, ஒரு பக்கத்துல அவங்க இருந்துகிட்டு, இன்னொரு பக்கத்தை வாடகைக்கு விடுவாங்க. அதே மாதிரி ஒரு வீடு. வீட்டோட வராந்தாவும், உள்ள ஒரு அறையும் இருந்துச்சு. வீட்டுக்காரர் ஒரு நா வாடக அம்பது ரூவா ஆகும்னு சொன்னாரு. அத விட கொறச்சு பேசலாம்னா, ஆள் வேற பெரிய மீசையோட, கர கரனு பேசுனாரு. பேசறதுக்கே பயமாருந்துச்சு. பெறவு, சாம்பிராணி ரவி மெல்லப் போயி, அண்ணாச்சி! நாங்க பையங்களா காசு சேத்து வந்திருக்கம். வாடகய பாத்துச் சொல்லுங்க அண்ணாச்சினு சொன்னதும், ஒரு நா வாடக முப்பத்தஞ்சு ரூவானு கொறச்சுக் கொடுத்தாரு.
மறுநா மத்தியானமே காலி செய்றதாப் பேச்சு. அதனால இருந்தமட்டுக்கும் இரவு, பகல்னு பாக்காம, மழ பேஞ்சாலும், குளுரடிச்சாலும், தண்ணி விழறதப் பாத்து பயத்தோட, அருவி அருவியாப் போய்க் குளிச்சோம். ஆஹா! என்னவொரு சுகம்ன்றீங்க! அப்பத்தான் மல மேல நடந்து, செண்பகாதேவி அருவியும், பாறை, பாறையாத் தாவிப் போய் தேனருவியும் பாத்தேன். அதுக்குப் பொறவு போறப்போ தேனருவி பாக்க வாய்க்கலை.
போன மாசம் ஊர்ல ஒரு திருமண வரவேற்புக்கு போயிருந்தப்போ, முத்தையா சாரையும், எட்வின் பாலையா சாரையும் தற்செயலாய்ப் பாத்தேன். ரெண்டு பேருக்கும் என்ன அடையாளந் தெரியல. என்னப் பத்துன வெவரம் சொன்னதும் முத்தையா சாருக்கு மட்டும் தெரிஞ்சது. இப்ப நான் ஒவ்வொரு எடமாச் சுத்திட்டிருக்கதுக்கு காரணமே நீங்க தான். அன்னைக்கு, நீங்க குத்தாலத்துக்குப் போங்கடானு சொல்லலைன்னா, இவ்வளவு எடங்கள நான் பாத்திருக்க மாட்டேனு பாலையா சார்ட்ட சொன்னேன். இன்னமும் அப்படியே சொல்லீட்டுத் தான் இருக்காருனு முத்தையா சார் சொன்னாரு.
அதே போல, முத்தையா சார்ட்டயும், உங்கட்டருந்து கெடச்ச தமிழ்ப்பற்று தான், இப்ப தமிழ்ல பதிவுகள் எழுதுமளவுக்கு தூண்டியிருக்குன்னு சொன்னதும், ஆர்வத்தோட வலைத்தள முகவரிய குறிச்சு வாங்கிக்கிட்டார். நித்திலம் என்ற அவரது பெயரில் தாள் அங்காடியும், ஆயத்த ஆடை விற்பனையகமும் நடத்தி வருகிறார்.
இருவருக்கும் நன்றி கூறி விடைபெறும் போது மிக மிக மகிழ்வாயிருந்தது.
குத்தாலத்துல சாரல் ஆரம்பிச்சு, அருவியில் தண்ணி ஊத்து ஊத்துனு ஊத்துது. திருப்பூரச் சுத்தி குளிக்கதுக்கு எம்புட்டோ அருவியிருந்தாலும், போயிட்டு வந்தாலும், மனசு ஆற மாட்டேம்ங்குது. இப்பயும் குற்றாலம்னு, யாரோ, யாரிடமோ பேசிக்கிட்டிருக்கது காதுல வுழுந்தாக் கூட சாரலும், குளுரும் மனசுக்குள்ள வந்து அடிச்சிட்டுப் போவுது. ப்ச்! இந்த வருசமாச்சும் குத்தாலம் போவணும்.

Comments on: "புறஞ்செலல்" (52)
சூப்பர் பாஸ்!
முதன் முதலா டூர் போறது அதுவும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்க்கூட எந்த விதமான எக்ஸ்பீரியன்ஸும் இல்லாம போறதுங்கறது நிஜமாவே டெரரான விசயம்தான் ஆனாலும் அதுல ஒரு ஜாலி இருக்கும் நாங்க ஸ்கூல்ல படிக்கிறச்ச தனியா போக சான்ஸ் கிடைக்கல,எல்லோர் கூடயும் போயிட்டு வந்து அப்புறம் அதை பத்தி கட்டுரை எழுதி ப்ரேயர் டைம்ல படிச்சு காமிச்சு ஹம்ம்ம்!
பிறகு முதன் முதலா பெரிய மனுசங்களெல்லாம் சேர்ந்து டூர் போய் அந்த – தனியா ஊர் சுத்தி பாக்கணும்ங்கற – ஏக்கத்தை நிறைவேத்திக்கிட்டோம் – போன இடம் – எண்ட தேசம் கேரளா மேலாண்ட கை [காசர்கோடு,வயநாடு]
))
ஓஹோ! அப்பருந்தே மல்லு தேசமா?
தல,
அடுத்த டேராவ அங்கன போட்டிருவோமா?
போடலாம்னு மனசு சொல்லுது. கடமை தான்……..?
கடமை…..தேவை
டேரா…..தேவை…தேவை…தேவை…தேவை…
நிச்சயம் இரண்டும் தேவை சிவா!
அரிதாக பதிவு போடும்போது இப்படித்தான் அடர்த்தியாய் கிடைக்குமோ. ரொம்ப நல்லாருக்கு வெயிலான்.
குளிர்ச்சியான கற்பனை.
நன்றிண்ணே!
\\போடலாம்னு மனசு சொல்லுது. கடமை தான்…….\\
மனசு பூரா ஊர் சுத்த ஆசைப்பட்டாலும் திருப்பூர் வாழ்க்கை போதுமான ஒத்துழைப்பு தராது
)
திருப்பூர் வாழ்க்கைக்கு இப்படி எங்கேயாவது போனால் தான் நல்லது சிவாண்ணே!
தல! இந்தத் தடவ சீசன் ஆரம்பிச்ச (13/6)அன்னிக்கு அருவியில் குளிக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சது.
சாரலோட குளியல் ரொம்ப அருமை….
குளியல்..டிபன்,டீ..சாரல்..குளியல்..
குளியல்..டிபன்,டீ..சாரல்..குளியல்..
குளியல்..டிபன்,டீ..சாரல்..குளியல்..
குளியல்..டிபன்,டீ..சாரல்..குளியல்..
இப்படியே இருக்கத்தான் ஆசை…
ஆனா, நீங்க சொன்ன கடமை…ம்ஹீம்..விடமாட்டேங்குது…
அனுபவிச்சிருக்கீங்க போல சிவா! அருமை…. அருமை….
ஒரே சிவ(வா) மயமா இருக்குது
nice
thanks ramji!
இடுகையே குளுகுளுன்னு இருக்குண்ணே
திருப்பூர் சங்கத்துல போனா, ஈரோட்டையும் சேத்துக்குங்கப்பு
நீங்கள் இல்லாமலா? போகும் போது, போனா சொல்லி வுடறோம்
அப்படியே கொடைக்கானல் தூறலில் கிளம்பி எட்டாப்புக்கு தூக்கிட்டிப் போயிடுச்சு…. மலரும் நினைவுகளை வெளிக்கிட வைத்ததற்கு நன்றி பாஸ்!
ஏழைகளின் கொடைக்கானல் அல்லது மலைவாசஸ்தலம் தான் குற்றாலம்.
நன்றி தமிழ்!
தலைவரே,படிச்சதுக்கே…குற்றாலம் போயிட்டு வந்தமாதிரியே இருக்கு
நன்றி திரு.
\\ இடுகையே குளுகுளுன்னு இருக்குண்ணே
திருப்பூர் சங்கத்துல போனா, ஈரோட்டையும் சேத்துக்குங்கப்பு\\
இதை நான் வழிமொழிகிரேன்..
ஈரோடை எப்படி திருப்பூர் சங்கத்துல சேர்க்க முடியும்?
நன்றி ஜாபர்!
அருமை.
அடுத்து எப்போ போறோம்?
போய்யா! போய்யா! உன்னையெல்லாம் இப்ப ஆட்டையில சேத்துக்க முடியாது.
நிறைய கத்துக்கணும் போல உங்களிடமிருந்து.
நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது குசும்பன்!
மிகவும் ரசித்தேன். நிறைய உள்ளே இருக்குது? ஆனால் வெளியே தான் வரமாட்டுது. சாமி யை விட்டு பேசச் சொல்லட்டுமா?
தல அருமை…! எப்பன்னு சொல்லுங்க,,!
நான் புறஞ்சொல்லல்,நினைச்சேன்…!
நன்றி செந்தில்!
திரும்பி திரும்பி படிக்கும் போது பல பய நினைவுகள் வந்து போனது. எழுத எத்தனை விசயங்கள் நமக்குள் ஒற்றுமையாய் இருக்கிறது?
நினைவுகளை மீட்டெடுத்து நீங்களும் வாருங்கள்.
தனியா பள்ளிக்கூடக்காலத்துல ஊரு சுத்தலா? பயம்மா இருக்குமே வீட்டுல ..
ஆனா எல்லாரும் நல்லபடி நல்லபையனா திரும்ப வந்ததால் நல்லதாச்சு..
பயந்துட்டே இருந்தா, எப்படி வெளியுலகம் தெரிஞ்சுக்கிறது? அதான்!
அண்ணே.,
இங்கயும் ஒரு தேஞ்சுபோன சவிக்களுக்கு பஞ்சர் ஒட்டனும்ணே..
மொதல்ல உங்க வாய்க்கு ஒட்டணும்ணே! அதுக்கப்புறம் தான் சவிக்களுக்கு……
நல்ல கவுண்டர் அட்டாக். எப்பிடியிருக்கீங்க, கும்க்கி.?
அட்டகாசம் பண்ணியிருக்கீங்க வெயில்.!
முக்கியமான விசயம் யாதெனின் உள்ளூர்க்காரன் நானே தேனருவி போனதில்லை. இளமைக்காலங்களில் ஒவ்வொரு தடவை போகும் போதும் செண்பகாதேவி அருவியிலேயே /அதற்கு முன்னதாகவே ஓடைகளில் மணிக்கணக்காக ஊறிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிடுவோம். இனியும் தேனருவி காண்பது கடினமே என எண்ணுகிறேன்.
உள்ளூரில் இருக்கும் போது தெரியாது ஆதி, விலகி வந்தபின் தான் அருமை தெரியும்.
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.
நான் போகும் போதே செம்பகா தேவி அருவிக்கு மேல் இருந்த ஒரு தற்காலிகப் பாலம் சிதிலமடைந்திருந்தது.
நண்பர்கள், வரிசையாக கை கோர்த்து நின்று ஓடும் நீரைக் கடக்க வேண்டியிருந்தது. மேலே செல்லச் செல்ல பாதைகளே இல்லை. பாறைகள் மட்டுமே.
நீரோட்டத்தில் பாறைகள் பாதைகளை மறைத்தும், வழிமாற்றியும் வைத்திருந்தது. தேனருவிக்கும் மேலும் என்னுடன் வந்த நண்பர்கள் சென்று பார்த்து வந்தனர்.
மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் உள்ளூர்க்காரர்கள் உதவியுடன் போய்ப் பார்க்க முயலலாம் ஆதி! உங்கள் படப்பொட்டிக்கும் நல்ல வேலை கொடுத்த மாதிரி இருக்கும். நீங்கள் போவதாக இருந்தால், நான் ஏற்பாடு செய்கிறேன்.
மேலே உள்ள படம் நான் எடுத்ததல்ல. வேறு ஒரு வலைத்தளத்திலிருந்தது.
கட்டுரை நெடுகிலும், அப்புறமும், கண்ணில் நீர் கோர்த்து நிற்க வாசித்தேன். சைக்கிள்க்கடை அழுக்குப் பிசுக்கின் அந்தக் கைதானே இன்று இப்படி எழுதுகிறது என்று வாஞ்சை கொண்டு நெகிழ்ந்தேன். கும்கியின் பின்னூட்டம் வாசித்துச் சிரித்ததில் கோர்த்துநின்ற கண்ணீர் சாரலெனச் சிதறி உதிர்ந்தது.
தேனருவிக்கு மேல் வட்டமாய் விரிந்து விழும் அதைப் ‘பாலருவி’ என்போம். அதற்கும் மேலான உச்சிமலைக் காடுகளிலும் அலைந்திருக்கிறேன். வனராஜ் என்றொரு கல்லாச் சிறுவனோடு (அதற்கு முந்திய ஆண்டு அலைச்சலில் எனக்குக் கிட்டிய நண்பன்) நான்கு குழந்தைகளுக்குத் தாய் ஒரு பேரழகியைக் கண்டு ‘வனதேவதையோ!’ என்று மிரண்டிருக்கிறேன். நண்பர்களோடும் தனியாகவும் சுற்றி அலைந்திருக்கிறேன்.
தேனருவி கொட்டும் அந்தப் பிளவுக் குண்டுக்குள் நீந்தி இருக்கிறேன். அதில், இடைவழியில், நெஞ்சாழத்துக்கு நின்று இளைப்பாற ஒரு பாறை தட்டும். அதில் சற்று மூச்சு வாங்கி, அப்பால் அருவி தலைகுப்புற விழுந்து மண்டை சிதறுகிற பெரும்பாறையை எட்டித் தொடலாம். தொட்டு, அச் சாரல் ஊசிகள் பட்டுச் சிலிர்க்கலாம். ஆனால், பாறைமேல் ஏறமுடியாது. அது ஒரு காலம், ஆகா!
என்னதான் இருந்தாலும் இளமை முறுக்கின் ஆண்டுகளால் அடுத்தடுத்தான என் நாடோடித் தடம், உங்கள் வாலை வயதின் கன்னிச்சுவட்டுக்கு ஈடாகாது. ஆகவே ஆகாது.
குற்றாலத்தை மீளத் தந்ததற்கு நன்றி.
என்ன ஒரு நெகிழ்வான பின்னூட்டம் சுந்தர்ராஜன்ண்ணே? என்னையும் கலங்கடித்து விட்டீர்கள். இது நாள் வரை நான் எழுதியவற்றின் அர்த்தம் இப்போது விளங்குகிறது. தூர நின்றே உங்களை இதுவரை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது மேலும்… இந்த நெஞ்சார்ந்த புரிதலுக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. என் அன்பு என்றென்றும்.
தேனருவியிலிருந்து பாலருவிக்கு செல்வது இன்னும் கடினம். என்னால் போக முடியவில்லை. நண்பர்களின் சொல் வழி மட்டுமே காண முடிந்தது. நீச்சல் தெரியாததால், குறை நீரில் குளித்து சாரலையும் அனுபவிக்க முடிந்தது. பார்க்கும் போதே பயமுறுத்தும் தோற்றம் கொண்டது இத்தேனருவி. உச்சிமலைக்காடுகள், வனதேவதை என்று கடந்திருக்கிற உங்களின் நாடோடித் தடம் குறித்து எனக்கு பொறாமையாய் இருக்கிறது.
நானும் மறுமொழியிடுகிறேன் !
ஒத்துக்கொள்கிறேன் தம்பி!
குற்றாலத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்குண்ணே!!!
நன்றி தம்பி.
keep it up
ravi
tup
நன்றி வாத்தியாரே!
Anna etha Amma padichitu aluthutanga sundarajan reply parthutu….
நல்ல பதிவு.
உங்களது எழுத்து நடை நன்கு சரளமாக அலங்காரம் இல்லாமல் இயல்பாக பேசுவது போல் நன்றாக இருக்கிறது.
நன்கு தொடர்ந்து எழுதுங்கள். உங்களது பதிவில் ‘Followers Widget’ இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
.
புறஞ்செலல் – outing க்கு என்ன ஒரு தமிழ் ச்சொல் – அருமை .
இந்த பதிவைப் படிக்கும் போது உங்களுடன் நானும் வந்தது போல் ஒரு உணர்வு. ஆசிரியர் பற்றி குறிப்பிட்டது அருமை.
I totally agree with this comment
/*
ராஜசுந்தரராஜன்
கட்டுரை நெடுகிலும், அப்புறமும், கண்ணில் நீர் கோர்த்து நிற்க வாசித்தேன். சைக்கிள்க்கடை அழுக்குப் பிசுக்கின் அந்தக் கைதானே இன்று இப்படி எழுதுகிறது என்று வாஞ்சை கொண்டு நெகிழ்ந்தேன். */
good writing