அழிக்கப்படும் புராதனங்கள்

Posted by fourthpress on October 13, 2010 

சிதறாமல் அமர்வாரா ஜைனர்?
ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே.
கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை.
மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர்.
இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?
வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியீடு  செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி: http://fourthpillar.wordpress.com/
திரு. ஆரூரன் - http://arurs.blogspot.com/2010/10/blog-post_14.html
புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி: collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in

To

The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regards,

collrpdk@tn.nic.in

தந்தி மரம்

தெருவின் பெரும்பான்மை முஸ்லீம்கள் தான் குடியிருந்தார்கள். தெருவுக்குள் நுழையும் போதே புலால், பிரியாணி மசாலா, தீப்பெட்டி பசை, வாசனைத் திரவியம் இவைகளெல்லாம் கலந்ததொரு வினோத வாடை வரும்.

நுழைந்து வலதுபுறம் திரும்பியதும், இடது முனையில் பெரிய திண்ணைகளுடன் ஒரு வீடு இருக்கும்.   ஒரு காலத்தில் வீடாக இருந்திருக்கலாம்.  இப்போதும் இருக்கலாம்.  ஆனால், அப்போது அது தான் தந்தியாபீசு.  அதன் எதிரில் ஒரு பள்ளி வாசல் இருக்கும்.  தந்தியாபீசு திண்ணையில் ஏறி பள்ளிவாசலுக்குள் பார்க்கலாம்.  மந்திரம் ஓதுவதற்காக, குழந்தைகளுடன் பள்ளி வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தத் தெரு அழகான சிமிட்டி சாலைகளுடன், இரண்டு பேருந்துகளும் ஒன்று சேர்ந்தாற் போல் செல்லக்கூடிய அளவுக்கு அகலமானது.  ஆனால், நீளம் குறைந்த சிறிய தெரு. தந்தி அலுவலகம் இருந்ததால், தெருவின் பெயர் தந்திமரத் தெரு.  உண்மையான பெயரும் அது தான்.  மின் கம்பங்களுக்கு, கம்பம் என்று பெயர் இருக்கும் போது, தந்திக் கம்பி வடங்களைத் தாங்கிச் செல்பவைகளுக்கு மட்டும், மரம் என்று பெயர் எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

தந்தி அலுவலத்தை கடந்து செல்லும் போது, யாராவது நாலைந்து பேர் கவலை தோய்ந்த முகங்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.  நடுநிசியில் கூட சிலநேரம்.  நானும் ஒன்றிரெண்டு தடவை, இரவு முழுவதும் அந்தத் திண்ணையிலேயே கழித்திருக்கிறேன்.  கட்டிடத்தைச் சுற்றி மேற்கூரையுடன் கூடிய உயரமான திண்ணைகள் இருக்கும். வாசலின் இருபுறமும் கூட திண்ணை தான்.  சாய்மானத்திற்கு தகுந்த இடைவெளிகளுடன் மரத்தூண்களும் இருக்கும்.  அழுக்கும், எண்ணைய் பிசுக்கும், கவலையும் தோய்ந்த திண்ணைகளவை.

உறவினர்கள் இறந்த போது,  அனுப்ப வேண்டிய முகவரிகளுடன் தந்தி அலுவலகம் வந்த பின் தான், என்ன அனுப்ப வேண்டுமென்ற தகவலைக் கேட்காமல் வந்து விட்டது நினைவிற்கு வரும்.  மெதுவாக, தயங்கியபடி அரைத் தூக்கத்தில் இருக்கும் அலுவலரிடம் கேட்டால், எரிச்சல் படுவார்.  இல்லையெனில் இறந்தவர் பெயரைச் சொன்னால், தகவலை அவரே தயாரித்துக் கொள்வார்.  முகவரிகளை மட்டும் தனித்தனி படிவத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும்.

நாம் அனுப்ப வேண்டிய வார்த்தைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி கட்டணம்.  ஒரு தந்திக்கு மொத்தமாக எத்தனை வார்த்தைகள் என கூட்டி (முகவரியும் சேர்த்து) எவ்வளவு பணம் எனக்கூறுவார்.  கொடுக்கும் முகவரியையும் சில சமயம் சுருக்கிக் கொள்வார்.  உதாரணத்திற்கு 18, கந்தபுரம் தெரு என இருந்தால் 18, என்பது முதல் வார்த்தை 1 இரண்டாவது 8 மூன்றாவது , (காற்புள்ளி) மூன்று வார்த்தையாக கணக்கில் கொள்ளப்படும்.  இதை Eighteen என சுருக்கினால் ஒரு வார்த்தைக்கு மட்டுமே கட்டணம்.  இரவிலிருந்து, அதிகாலை வரை தந்தி அனுப்ப இரு மடங்கு கட்டணம்.  பெரும்பாலும், இப்படியான நேரங்களில் தான் மரணத் தகவல்கள் அனுப்ப நேரிடும்.

படிவம் பூர்த்தி செய்ய தெரியுமென்பதால், உறவினர்கள், தெருவிலிருப்பவர்கள் யாராவது இறந்து விட்டால் எனக்கு தந்தி அனுப்பும் வேலை தான்.  பல நாட்கள் திண்ணையிலேயே காத்துக் கிடந்திருக்கிறேன்.  தொலைதூர ஊர்களுக்கும், உள்ளடங்கிய கிராமங்களுக்கும் தந்தி அனுப்பினால், நெடு நேரம் ஆகும்.  நாம் அனுப்பும் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் தந்தி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தவுடன், தந்தி போயிடுச்சு என்று உறுதி செய்வுடன் தான் கிளம்ப முடியும்.  அவர்கள், எப்போது தந்தியை சென்று உரிய முகவரிக்கு சேர்ப்பார்களோ தெரியாது.

அப்புறம், தகவல் தெரிந்து சில நாட்கள் கழித்து வரும் சிலர் எனக்கு தந்தி அனுப்பல/வரல….னு சொல்லி சண்டைக்கு வருவார்கள்.  அவர்களை தந்தி அனுப்பிய என்னையும், ரசீதையும் சாட்சியாக காண்பித்து சமாதானப்படுத்துவது ஒரு தனிக்கதை.

அதன்பின் வந்த, தொலை அச்சு இயந்திரம் (TELEX) தந்தி அனுப்புவதை கொஞ்சம் இலகுவாக்கியது.  இவ்வியந்திரத்தை ஒரு அபூர்வ காட்சிப்பொருள் போல தபால் தந்தி அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.  ஒரு நாள் பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தட்டச்சு இயந்திரத்தை விட, கொஞ்சம் பெரிய உருவில் இருக்கும்.

இயங்கும் போது மட்டும், திடுக்கிடும் சத்தமெழுப்பும், இடையிடையே ’கிணிங்’ மணிச்சத்தமும் கேட்கும்.   தட்டச்சும் போது, சிறிய நாடா அளவிலான தாளில் சிறு, சிறு துளையிடப்பட்டு மறுபக்கம் வெளியே வரும்.

தட்டச்சிய விசயங்கள் மிகவும் அதிகமாயிருந்தால்,  இந்த நாடாத்தாள் அனுமார் வால் போல நீளமாகிக் கொண்டேயிருக்கும்.  துளையிடப்பட்ட தாட்சுருளின் ஒரு முனையை இயந்திரத்தின் பக்கவாட்டில் நுழைக்க வேண்டும்.  அதற்கு முன் அனுப்ப வேண்டிய எதிர் முனை இணைப்பும் கிடைத்திருக்க வேண்டும்.  நாடாத்தாள் சுருள் முழுவதும் உள்ளே சென்று முடிந்த பின் செய்தி அங்கு சேர்ந்திருக்கும்.

இவ்வியந்திரத்தின் மேலிருந்த ஈர்ப்பால், பின்னாளில், துணி ஏற்றுமதியகமொன்றிலும், நூற்பாலையிலும் சில மாதங்கள் டெலக்ஸ் ஆபரேட்டராக பணிபுரிந்ததுமுண்டு.

சில தகவல்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் என்பவரால் 1837ம் ஆண்டு தந்தி அனுப்பும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.  1838ம் ஆண்டு இரண்டு மைல் தொலைவிலிருக்கும் இடத்திற்கு முதல் தந்தி அனுப்பப்பட்டது.

அதன்பின், மோர்ஸும், அவரின் உதவியாளர் ஆல்ஃபிரட் வெய்ல் இருவரும் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட, தந்திக் கருவியை உருவாக்கினர்.  இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது.  இந்தக் கருவி மூலம் எழுப்பப்படும் சமிக்ஞைகளின் உதவியால் தகவல் அனுப்பப்பட்டது.

மோர்ஸ் தந்திக் குறிப்பு என்ற பெயரில் குறியீடுகள் மூலம் தகவல் அனுப்பும் முறையே காலங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.  முக்கியமாக, வான் போக்குவரத்து தகவல் பரிமாற்றங்களில் உபயோகப்படுத்தப்பட்டது.

மோர்ஸ் தந்திக் குறிப்பு

உதாரணத்திற்குElectrical

அதன் பின்னர், ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சினால், நாடாத் தாளில் புள்ளிகள் போன்ற குறியீடுகள் துளையிடப்பட்டு தகவல் என்னவென்று கண்டறியப்பட்டது.

பின், தகவல் பரிமாற்றத்திற்கு தொலைபேசி, தொலை அச்சு, தொலை நகலி, மின்னஞ்சல் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

என் நினைவில் இருந்ததை வைத்தும், இணையத் தகவலுதவியுடனும் எழுதியிருக்கிறேன்.  ஏதேனும் தகவற் பிழை இருந்தால், சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

தாமஸ் ஆல்வா எடிசன் கூட சிறிது நாட்கள் தந்திக் கருவி இயக்குபவராக பணியாற்றியிருந்திருக்கிறார்.

புறஞ்செலல்

ஒன்றிரெண்டு பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஊரில் இருந்த காலம்.  இருந்த காலமென்ன, இப்பவும் அப்படித்தான்.  பெரும்புள்ளிகள் வேறு பள்ளிகளை ஊருக்கு வந்து விடாமல், பலவிதங்களில் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  எட்டாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம் மட்டும் ஊருக்குள் இருக்கும்.   ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டு வரை இருக்கும் உயர்நிலைப்பள்ளி ஊருக்கு சற்று வெளியே.

அந்தப் பள்ளிக்கூடத்தை ”ஐஸ் ஸ்கூல்” னு பேசும் போது சொல்லுவாங்க.  ஒரு வேளை, ஐஸ் வண்டிக்காரர்கள் பள்ளிக்கூட வாசலில் நிறைய நிற்பதால், வந்த பெயரா இருக்கும்னு, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போற வரை நினைச்சிட்டிருந்தேன்.  பொறவு தான் ஐஸ் அல்ல, High Schoolனு தெரிஞ்சது.

அங்க, ஒன்பதாப்புக்கு திருமலை ஐயாவும், பத்தில் புயல்நிதி ஐயாவும் (நெசப்பேரே இதான்), பதினொன்னுக்கும், பன்னெண்டுக்கும் முத்தையா ஐயாவும் தான் தமிழாசிரியர்கள்.  மொத மொத தமிழ்க் கட்டுரைக் குறிப்பேடுகளில், சுத்தத் தமிழில் அவங்கவங்க பேரை எழுதச் சொன்னதும் முத்தையா சார் தான்.  அதுலயும், பேர்ல வர்ற சமஸ்கிருத எழுத்தையும் தமிழ்ல எழுதுங்கனு வேற சொல்லீட்டாரு.  ஸ்ரீகாந்த்னு ஒரு பய, தமிழில் திருகாந்த் என்று எழுதீருந்தான்.  அதை சீகாந்த்-னு திருத்திக் கொடுத்தது இன்னும் நினைப்பிருக்கு.

அதே மாதிரி,  எட்வின் பாலையா சார் வரலாற்று பாடம் நடத்தறதோட மட்டுமில்லாம, உலகச் செய்திகள், பொது அறிவு, அப்புறம் வேறு நல்ல விசயங்களைப் புரியற மாதிரி சொல்லுவார்.  அப்படியொரு நாள்ல, ஏம்பா! நீங்களாகவே நாலஞ்சு பேர் சேந்து, மதுரைக்கோ அல்லது வேறு ஏதாவது எடத்துக்கோ போய்ப் பாத்துட்டு வரலாம்ல!  செலவும் கம்மியாத் தான் ஆகும்.  வெளி உலக அறிவும் கெடைக்கும்னு சொன்னாரு.  அவருக்கென்ன சொல்லுவாரு, இதெல்லாம் நடக்குற காரியமா?னு இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்றுவோம்.

குத்தாலத்துல சாரல் ஆரம்பிச்சதும்,  பையங்களாச் சேந்து குத்தாலம் போய்ட்டு வாங்கடா!னு ஒரு தடவ சொல்லிருந்தாரு. அதோட எம்புட்டு செலவாகும்ன்றதயும், எப்படியெப்படிப் போணும்றதயும், சொன்னாரு.  ரயில்ல போலாம்.  சினிமால பாத்த குத்தாலத்த நேருல பாக்கலாம், குளிக்கலாம்னு நாளுக்கு நாள் பேசிப் பேசி, போயிட்டு ரெண்டு நாள் இருந்திட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணுனோம்.

முழுப்பரீச்ச லீவு முடிஞ்சி, பள்ளிக்கூடம் தொறக்கதுறக்கு முந்துன வாரம் போய்ட்டு வந்திரலாம்னு ஒரு யோசன.  நாளும் குறிச்சாச்சு.  நாள் நெருங்க, நெருங்க, பாக்கிறவன் ஒவ்வொருத்தனும் நான் காசு வாங்கீட்டேன், வீட்ல கேட்டுட்டேன்னு கடுப்பேத்திட்டிருந்தாங்ங.  எங்கிட்ட காசுமில்லை, வீட்ல எப்படிக் கேக்கிறது?  கேட்டா அடி தான் விழும்ன்ற யோசனையில நாள் ஓடீட்டே இருந்துச்சு.  கெளம்பற நாளும் வந்துருச்சு.

பரீச்ச முடிஞ்சதுலருந்து, திரும்ப பள்ளிக்கூடம் தொறக்கற வரை, சைக்கிள் கடையில வேலை எனக்கு.  ஏற்கனவே, கடக்காரர்ட்ட குத்தாலம் போற விசயத்தச் சொல்லி, பணம் வேணும்னு காலையில கேட்டதுக்கு, காதுல வாங்கியும், வாங்காமயும் இருந்தாரு.  மதியம் திரும்பயும் காசு வேணும்னு ஞாவப்படுத்துனேன். பஞ்சுக்கடைக்காரர் வண்டி முடியட்டும்.  சாய்ந்தரம் வந்து எடுத்துட்டுப் போறேன்னிருக்காரு.  அவரு வந்தாத் தான் இன்னைக்கு காசு!னு சொல்லிட்டாரு.  ரயில்வே ஸ்டேசன் போற வழியில நான் வேல பாக்குற கடை.  ராத்திரி எட்டு மணிக்கு மேல செங்கோட்டை வண்டி வரும்.  ஏழு மணிக்கு முன்னாடியிருந்தே, ஒவ்வொருத்தனா பையோட வந்திட்டேருந்தாங்ங.

போறப்போ, காத்தடிச்சிட்டு, பஞ்சர் பாத்துக்கிட்டு, அழுக்குக் கையோட நின்னுட்டிருந்தவன்ட்ட,  கெளம்பி போறவன், ஒவ்வொருத்தனாக வந்து என்னடா வரலியா?னு ஐயோ! பாவமாப் பாத்துட்டு போய்ட்டிருந்தாங்ங. எல்லாரும் ஸ்டேசனுக்கு வந்திட்டாங்ங என்னத் தவிர.  நேரம் வேற ஆயிட்டேருக்கு.  நீ கெளம்புனு கடக்காரரும் சொல்லல.  நானும் கேக்கல.  நாம போகப் போறதில்லன்ற முடிவுக்கு வந்திட்டன்.  பொறவு, அவங்ஙளுக்குள்ளேயே பேசி, ஒவ்வொருத்தங்கிட்டயும் எவ்ளோ காசிருக்குனு கணக்கு பாத்துட்டு, கீரி மட்டும் கடைக்கு வந்து, டேய்! வீட்ல மட்டும் கேட்டுட்டு துணிய எடுத்திட்டு வா! ஒனக்குஞ்சேத்து எங்ககிட்ட காசிருக்கு.  பொறவு பாத்துக்கலாம்னு சொன்னான். ஒரே யோசனையா இருந்துச்சு.

யோசிச்சிட்டு ஒரே முடிவா, குத்தாலம் போவப் போறேன், வீட்டுக்குப் போய்ட்டுப் போகணும்னு சொன்னதும், நாம காசு கொடுக்காம எப்படிப் போயிருவாரு ஐயா?பாக்கலாம்னு நினைச்சிட்டிருந்தவர் முகத்துல ஈயாடல.  செரி! கெளம்புனு மட்டும் சொல்லிட்டாரு.  ஆனா, காசு கொடுக்கல.  அங்கயே ஒரு சைக்கிளக் கேட்டு எடுத்துக்கிட்டு, வீட்டுக்குப் போயி, எல்லாரும் எனக்காவக் காத்திட்டிருக்காங்ஞ.  எனக்கும் சேத்து வேற டிக்கெட் எடுத்திட்டாங்ஞனு சொல்லியும், தனியா வெளியூருக்குப் போறது என்ன பழக்கம்?  போவக் கூடாதுன்னுட்டாங்க.  பின்ன, கெஞ்சிக் கெதறி, அழுது புடிச்சதுல, எக்கேடு கெட்டோ போய்த் தொலைன்னுட்டாங்க. அப்ப வீட்லயும் காசுக்கு கஷ்டம். எதும் இல்லை.  செரி! பரவாயில்லைனு துணியெல்லாம் எடுத்து பையில அமுக்கித் திரும்பயும், கடைக்கு வந்து வண்டிய விடும் போது, கடக்காரர் காசு வச்சிருக்கியாடா?னு கேட்டார்.  இல்லன்னதும், அந்த மாசச் சம்பளம் எழுவத்தஞ்சு ரூவாயக் கொடுத்தாரு.

மொத்தம் பதினோரு பேரு.  குத்தாலம் போறேன்/றோம்ன்றத நம்பவே முடியல.  ஆனா, வண்டி வர்றதுக்காக காத்துக் கெடக்கோம்.  திடீர்னு மனசு மாறி, வீட்லருந்து வந்து கூட்டீட்டுப் போயிருவாங்களோ?  இன்னும் ரயில வேற காணோமேனு மனசுக்குள்ள பதட்டம்.  மொத, மொத தனியா, அதுவும் கூடப்படிக்கிறவங்ஙளோட. சொல்ல முடியாத மகிழ்ச்சி.  எல்லாரும் ஒரே கூத்தும், கும்மாளமும் தான் செங்கோட்டை போய்ச் சேர்ற வரைக்கும்.

தெங்காசி வரும் போதே, நல்ல சாரல் அடிச்சது.  செங்கோட்டைக்கு போய்ச் சேந்து ஸ்டேசன்லேயே படுத்திட்டு, காலையில எந்திச்சு குத்தாலம் போங்கனு ஏற்கனவே வாத்தியாரு சொல்லியிருந்தாரு.  குத்தாலச் சாரலும், குளுரும் செங்கோட்டையிலயும் இருந்தது.  விடியுற வரைக்கும் தூங்கவேயில்லை.  தூக்கமும் வரல, அலுப்பாவும் தெரியல.  ஆனாலும், நல்லாருந்துச்சு.

காலயில கெளம்பி குத்தாலத்துக்கு போய், தங்குறதுக்கு எடம் தேடிக் கடேசியா “கண்ணாடி பங்களா”னு ஒரு எடத்துக்கு வந்து சேந்தோம். வாடகையும் கட்டுபடியாகுறாப்புல இருந்தது.  குத்தாலத்துல தண்ணி விழ ஆரம்பிச்சிருச்சுனா,  உள்ளூர்க்காரங்க அவங்க தங்கியிருக்கிற வீட்டையே ரெண்டாப் பிரிச்சு, ஒரு பக்கத்துல அவங்க இருந்துகிட்டு, இன்னொரு பக்கத்தை வாடகைக்கு விடுவாங்க.  அதே மாதிரி ஒரு வீடு.  வீட்டோட வராந்தாவும், உள்ள ஒரு அறையும் இருந்துச்சு. வீட்டுக்காரர் ஒரு நா வாடக அம்பது ரூவா ஆகும்னு சொன்னாரு.  அத விட கொறச்சு பேசலாம்னா,  ஆள் வேற பெரிய மீசையோட, கர கரனு பேசுனாரு.  பேசறதுக்கே பயமாருந்துச்சு.  பெறவு, சாம்பிராணி ரவி மெல்லப் போயி, அண்ணாச்சி! நாங்க பையங்களா காசு சேத்து வந்திருக்கம். வாடகய பாத்துச் சொல்லுங்க அண்ணாச்சினு சொன்னதும், ஒரு நா வாடக முப்பத்தஞ்சு ரூவானு கொறச்சுக் கொடுத்தாரு.

மறுநா மத்தியானமே காலி செய்றதாப் பேச்சு.  அதனால இருந்தமட்டுக்கும் இரவு, பகல்னு பாக்காம, மழ பேஞ்சாலும், குளுரடிச்சாலும், தண்ணி விழறதப் பாத்து பயத்தோட, அருவி அருவியாப் போய்க் குளிச்சோம்.  ஆஹா! என்னவொரு சுகம்ன்றீங்க!  அப்பத்தான் மல மேல நடந்து, செண்பகாதேவி அருவியும், பாறை, பாறையாத் தாவிப் போய் தேனருவியும் பாத்தேன்.  அதுக்குப் பொறவு போறப்போ தேனருவி பாக்க வாய்க்கலை.

போன மாசம் ஊர்ல ஒரு திருமண வரவேற்புக்கு போயிருந்தப்போ, முத்தையா சாரையும், எட்வின் பாலையா சாரையும் தற்செயலாய்ப் பாத்தேன்.  ரெண்டு பேருக்கும் என்ன அடையாளந் தெரியல.  என்னப் பத்துன வெவரம் சொன்னதும் முத்தையா சாருக்கு மட்டும் தெரிஞ்சது.  இப்ப நான் ஒவ்வொரு எடமாச் சுத்திட்டிருக்கதுக்கு காரணமே நீங்க தான்.  அன்னைக்கு, நீங்க குத்தாலத்துக்குப் போங்கடானு சொல்லலைன்னா, இவ்வளவு எடங்கள நான் பாத்திருக்க மாட்டேனு பாலையா சார்ட்ட சொன்னேன்.  இன்னமும் அப்படியே சொல்லீட்டுத் தான் இருக்காருனு முத்தையா சார் சொன்னாரு.

அதே போல, முத்தையா சார்ட்டயும், உங்கட்டருந்து கெடச்ச தமிழ்ப்பற்று தான், இப்ப தமிழ்ல பதிவுகள் எழுதுமளவுக்கு தூண்டியிருக்குன்னு சொன்னதும், ஆர்வத்தோட வலைத்தள முகவரிய குறிச்சு வாங்கிக்கிட்டார்.  நித்திலம் என்ற அவரது பெயரில் தாள் அங்காடியும், ஆயத்த ஆடை விற்பனையகமும் நடத்தி வருகிறார்.

இருவருக்கும் நன்றி கூறி விடைபெறும் போது மிக மிக மகிழ்வாயிருந்தது.

குத்தாலத்துல சாரல் ஆரம்பிச்சு, அருவியில் தண்ணி ஊத்து ஊத்துனு ஊத்துது. திருப்பூரச் சுத்தி குளிக்கதுக்கு எம்புட்டோ அருவியிருந்தாலும், போயிட்டு வந்தாலும், மனசு ஆற மாட்டேம்ங்குது.  இப்பயும் குற்றாலம்னு, யாரோ, யாரிடமோ பேசிக்கிட்டிருக்கது காதுல வுழுந்தாக் கூட சாரலும், குளுரும் மனசுக்குள்ள வந்து அடிச்சிட்டுப் போவுது.  ப்ச்! இந்த வருசமாச்சும் குத்தாலம் போவணும்.

சென்ற பயணத்தின் போது எடுத்த படங்கள்.

நெனப்பு…

வலைப்பக்கம் ஆரம்பித்த போது, நிறைய எழுத வேண்டும் என்று ஒவ்வொரு  பயணங்களிலும், ஓய்வுகளிலும், உறங்கா இரவுகளிலும் நினைப்பதுண்டு.  படிக்க மட்டும் முடிகிறது.

நெனப்பெல்லாம் எப்பயுமே நெசமாகுறதில்லயே!

திருப்பூர் வந்த புதிதில், அலுவல் நிமித்தமாய், முன்பு அந்த அலுவலகத்துக்கு அடிக்கடி போக வேண்டியிருந்தது.  அப்படியொரு தொழில்முறை சந்திப்பின், ஒரு மாலையில் அந்த அலுவலகத்தில், நண்பர். வேலுச்சாமி ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

என்ன புத்தகம்? என ஆவலுடன் கேட்டேன்.  அது கணையாழி!  அதன் பின்னான உரையாடலில், வேல்ச்சாமியும், அவருடைய நண்பரும் நீங்கள் என்ன படிப்பீர்கள்? என என்னிடம் விசாரித்தனர்.  குமுதம், குங்குமம், ஆனந்த விகடன் இந்த மாதிரி தானே? என கேள்விப் பட்டியலிட்டார்கள்.  அதுவும் படிப்பேன்.  அதில்லாமல், சுபமங்களா, புதிய பார்வை இரண்டு மட்டும் தான் வழக்கமாக வாங்கி படிக்கிறேன் எனக் கூறியதும், அவர்களிருவரும், வேற்றுக் கிரக மனிதனை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்தனர்.  அவர்கள் அறிந்த வரை, அப்போது அவர்களது நட்பு வட்டத்தில் எவரும் இத்தகைய புத்தகங்களைப் படிப்பதில்லை.  ஆதலால் என் பதில் அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமூட்டியது.

ஏனென்றால், திருப்பூரில் இது போன்று சொல்பவர்களே அரிது.  நாங்கள் உங்களிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவேயில்லை எனச் சொல்லி, ஏன் கணையாழி படிப்பதில்லை? என கேட்டு விட்டு கணையாழியில் வெளியாயிருந்த ஒரு கவிதையைக் காண்பித்தார்.

கவிதைக்குக் கீழே மகுடேசுவரன் என்ற பெயர் இருந்தது.  நண்பர் வேலுச்சாமியிடம் கேட்ட போது ”நம்ம மகுடேஸ் எழுதுனது தாங்க!”னு உறுதிப்படுத்தினார். அப்போதிலிருந்து தான் எனக்கும் அவர் கவிதை எழுதுவார் என்று எனக்கு தெரியும்.  பின் கணையாழி அலுவலக முகவரியும் எழுதிக் கொடுத்து, சந்தாதாரராகும் படி சொன்னார்.

அவருடைய கவிதைகள் ஒரு சில தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளில் மட்டும் தான் வெளி வந்து கொண்டிருந்தது.

பின்னான சந்திப்புகளில், பிரசுரமாகாத அவருடைய கையெழுத்துப் பிரதியை வாசித்து விட்டுக் கொடுப்பது வழக்கம். அவருடைய கையெழுத்து மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.  கரிசல் கதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் சிலாகித்துப் பேசுவார்.

எனக்கு மிகவும் ஊக்கமளித்து நிறைய எழுத சொல்லுவார் கவிஞர். மகுடேசுவரன்.  கவிதையோ, கதையோ  ஏதாவது எழுதுங்கள், எழுதிவிட்டு என்னிடம் காண்பித்தால் சரி செய்து தருகிறேன் என ஒவ்வொரு சந்திப்பின் போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

காலப்பின்னலில் நானும் பஞ்சும், நூலுமாகிப் போனேன்.

வலைப்பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த நாட்களில், அவரையும் வலைத்தளங்களில் எழுதச் சொன்னேன்.  ஆனால், அப்போது அவருக்கு  ஆர்வமில்லை.  இப்போது அவருடைய வலைத்தளத்தில் பதிவுகள் எழுதுகிறார்.

அச்சு அசலான கொங்கு வட்டார வழக்கில், காதலின் அழுத்தத்தை இப்படிப் பதிவு செய்கிறார்.
என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கெட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்…. ஆமா….
வரும் ஜீலை 25ம் தேதி மாலை கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு, திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  
நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

வேடிக்கை

அதிகாலையில் நகர் நோக்கியொரு சிறு பயணம் செல்ல வேண்டியிருந்தது.   செல்லலாமா?  வேண்டாமா? என இரு வேறு யோசனைகள்.  இருந்தும், தவிர்க்க முடியாத கட்டாயம் இருந்ததால், புறப்பட்டேன்.

செல்லும் வழியில் மன்னர் எதிர்ப்பட்டால், ரதங்கள் கடக்கும் வரை பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டி வருமென்பதால்,  பெருவழி தவிர்த்து, சிற்றூர்களின் வழி நகருக்குள் நுழைந்தாயிற்று.  எதிரில் குதிரைப்படை கூட தென்படவில்லை.  ஒரு சில காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

நகர முகப்பில், சிலைகளுடன் கூடிய அலங்காரத் தோரணமே பெருவிழாவொன்று நடைபெறவிருப்பதை கட்டியங்கூறிற்று.

தூய்மையான சாலைகளின் நடுவே சுடர் விளக்குக் கம்பங்கள்,  இலச்சினைகள் பொறிக்கப்பட்ட வர்ணக்கொடிகள், தென்னை, பனையோலைத் தோரணங்கள், ஆங்காங்கே மன்னரின் அருமை, பெருமைகளைப் பறைசாற்றும் பதாகைகள், சாலையின் இருமருங்கிலும் பத்தடிக்கோர் அரண்மனைக் காவல் வீரர் என நகரமே மன்னரின் வருகையையொட்டி, நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற சலங்கை நடனம் காணுவதைக் கூட தவிர்த்து, அரண்மனை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு, தாமதமாய் மன்னர் படுக்கைக்குச் சென்றதால், பரபரப்பின்றி மக்கள் கொஞ்சம் நிம்மதியோடு அலைந்து கொண்டிருந்தனர்.

அனைத்து வழிகாட்டிப் பலகைகளின் அம்புக்குறிகளும் விழா நடக்குமிடம் நோக்கியே இருந்தது.  நிகழ்விடத்தில் சிற்சில சலசலப்புகள் இருந்ததால், கடப்பது தாமதமாயிற்று.  ஊர்வலப்பாதையின் இருமருங்கிலும் வண்ணக்கலவைகளுடனான, கண்ணைக் கவரும் வகையில் ஓவியங்களால், நகரத்தெருக்கள் புதுப்பொலிவுடன் களை கட்டியிருந்தது.

மன்னர் ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்காக பல்வேறு வண்ணத்துணியலங்காரங்களுடனான தனி உப்பரிகை, இளைப்பாறும் வசதியுடன் தயாராகிக் கொண்டிருந்தது.  இளவரசர், இளவரசி, தளபதிகள் குடும்பத்தாருக்கென தனித்தனியான சிறு உப்பரிகைகள்.  மந்திரிப் பிரதானிகளுக்கும் கூட.

மன்னர் உரைநிகழ்த்தும் நிகழ்விடமெங்கும் சாரை, சாரையாக மக்கள்.  ஆடம்பரத் தோரணவளைவுகள்,  குதிரைப்படை வீரன் சிலை, புலவர்களின் சிலைகள் என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  கூடாரங்களின் உட்புற மேற்பகுதி கூட அலங்கரிக்கப்பட்டிருந்தது.  கூடங்களில் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.  தங்குமிடங்களனைத்தும் அரண்மனை காவலர்களாலும், சேவகர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.  பயிர் நிலங்களை செப்பனிட்டு, ரதங்களை நிறுத்துவதற்கு தயார்ப்படுத்தியிருந்தனர்.

மன்னர் தங்கியிருந்த மாடமாளிகையின் முன்னே,  எப்போது, என்ன உத்தரவு வந்தாலும் செயல்படுத்துவதற்கேற்ப பல்வேறு ரதங்கள் தயார் நிலையில் இருந்தன. சிறப்பு பயிற்சி பெற்ற காலாட்படை வீரர்களும் வித்தியாசமான உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.  அரண்மனை அதிகாரிகளும் அதிகளவில் குழுமியிருந்தனர்.

தமிழினத்தைத் தளைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும்.  அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்? என்ற கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்.

பணிப்பெண்கள்

திருப்பூரின் சாலையோரங்களில், எங்காவது நீங்கள் சிறிது நேரம் அசையாது நின்றால், உங்கள் கழுத்தில் “செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை” என்ற வாசகங்கள் தாங்கிய அட்டை தொங்க விடப்பட்டிருக்கும்.  மின் கம்பங்களில், வாயிற் கதவுகளில், என எங்கு திரும்பினாலும் இந்த அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  பனியன் தயாரிப்பு தொழிற்சாலைகளில், ஆடைகளின் தையல் வேலைகள் வேலைகள் முடிந்தபின், தேவையில்லாத நூல் மற்றும் இதர பிசுறுகளை நறுக்குவது, துணிகளில் எங்காவது கறை அல்லது துளை இருக்கிறதா?  தையல் விடுபட்டிருக்கிறதா, வண்ண மாற்றமிருக்கிறதா என பரிசோதனை செய்து, ஆடையை உதறி மடித்து வைக்கும் வேலையைச் செய்யும் பெண்களை செக்கிங் பெண்கள் என தமிழில்?! அழைப்பார்கள்.

செக்கிங் பணிக்கு வரும் பெண்களைப் பற்றிய கவிஞர். மகுடேசுவரனின் கவிதை.

செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை

பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது

சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது

விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது

துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது

அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது

மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது

இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்

மகுடேசுவரன்
(மண்ணே மலர்ந்து மணக்கிறது தொகுப்பிலிருந்து…)

பங்குனிப் பொங்கல்

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

எங்க ஊர்ல திருவிழா.

ஊர்ல பங்குனிப் பொங்கல்.

ஊர்ல நோன்பி.

ஊர்ல கோயில் கொடை.

ஊர்ல கொடி ஏத்தியிருக்கு.

ஊர்ல பொங்கச் சாட்டியிருக்கு.

எல்லா ஊர்க்காரங்களுக்கும் புரியிற மாதிரி சொல்லியாச்சு.

எல்லாரும் வாங்க.  திருவிழாவை வேடிக்கை பார்த்துட்டு வரலாம்.

படங்களுக்கு நன்றி – VHND & MYVNR.